ரோஜா மீதான விமர்சனத்துக்கு நடிகை ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நடிகை ரோஜா பற்றி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பண்டாரு சத்யநாராயண மூர்த்தி என்பவர் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது நடிகையான ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளித்த ரோஜா, ‘ஒரு முன்னாள் மந்திரி, என்னைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசியிருக்கிறார். அவர் வீட்டிலும் மனைவி, மகள், மருமகள்கள் இருக்கின்றனர் என்பதை அவரும் நினைவில் வைத்துக்கொண்டு பேச வேண்டும். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தால் இப்படியெல்லாம் பேசுவீர்களா?’ என கேள்வி எழுப்பி கண்ணீர் விட்டார்.
இந்த நிலையில் ரோஜா மீதான விமர்சனத்துக்கு நடிகை ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:-
ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது. அண்மையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெண்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர். சமூகத்தின் ஒற்றுமையில் பெண்களும் ஒரு தூணாக உள்ளனர்.
இந்த நிலையில் பெண் குறித்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நிலையில் இதுபோன்ற அவதூறான விமர்சனங்கள் அசிங்கமாக உள்ளது என்றார்.
மேலும் ஒரு மந்திரியை ஆபாச படத்தில் நடித்ததவர் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. ஒரு மனிதராக, ஒரு குடும்பத்தின் தலைவனாக, ஒரு அரசியல்வாதியாக தனது தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.