ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் இந்திய அணி 100 பதக்கங்களைக் குவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதனை வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் எனத் தெரிவித்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என 100 பதக்கங்கள் வென்றுள்ளது இந்தியா.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு சாதனைத் தருணம். இந்திய மக்கள் அனைவரும் 100 பதக்கங்களைக் குவித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியத் தடகள வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் முயற்சிகள் இந்தியாவை இந்த வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டச் செய்துள்ளது. ஆச்சரியப்படவைத்த ஒவ்வொரு ஆற்றலும் நம் எண்ணங்களையும் வரலாற்றையும் பெருமிதத்தால் நிறைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்கள் இந்தியா வந்தவுடன் அவர்களை சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.