கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சீமான் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு – கர்நாடகா இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக இருந்து வருகிறது. காவிரி விவகாரம் இரண்டு மாநிலங்களிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ஞாயிற்றுக் கிழமை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! காவிரி நதிநீர் நம் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்! நாம் தமிழர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.