நடிகர் விஜய், ‘லியோ’ திரைப்பட ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்க்கு சப்போர்ட்டாக பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லியோ’படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தாலும், டிரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது. அந்த வசனம் மியூட் செய்யப்படாமல் அப்படியே ஒலித்தது.’லியோ’ ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவராலும், குறிப்பாக குழந்தைகளால், பெண்களால் விரும்பக்கூடிய ஒரு ஹீரோ, அனைவரின் கவனமும் பெற்ற ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூகப் பொறுப்புள்ள ஒரு நடிகர் இப்படிச் செய்யலாமா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் லியோ படத்தில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், “விஜய் அப்படி பேசுவது ட்ரெய்லரில் இருந்திருக்கும். தணிக்கையில் அதனை நீக்கியிருப்பார்கள். விஜய் இதில் இந்த வசனம் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சாதாரணமான மக்கள் மொழியில் இயல்பாக படம் எடுக்கும்போது இப்படித்தான் வரும். வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இயல்பான பேச்சுகள் இருக்கும். வாருங்கள், அமருங்கள் என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்க முடியாது. வெப் சீரிசில் கேவலமாக கொச்சையாக பேசக்கூடிய வார்த்தைகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. மயிர் என்ற வார்த்தையையே இங்கு கெட்ட வார்த்தையாக பரப்பி வருகின்றனர். விஜய் பேசுவதால் எல்லாரும் பேசப்போவது இல்லை. விஜய் சிகரெட் பிடிப்பதாலோ இல்லை மது அருந்துவதாலோ அதேபோல் எல்லாரும் செய்வார்கள் என்று கூறுவது தவறு” என பதிலளித்தார்.