ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு முதலில் தமிழ்நாட்டிலும், பிறகு கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி குன்கா 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததால் சிறை சென்றார். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குற்றமற்றவர் என விடுதலையானார். இதனிடையே 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா உயிரிழந்தார். சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017 பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா உயிரிழந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மூவரும் தண்டனை காலத்தை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கழித்த பின்னர் விடுதலையாகினர்.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிடக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் நரசிம்மமூர்த்தி என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மோகன், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தின் இன்றைய மதிப்பு குறித்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார். அதேபோல ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் சொத்துக்களை ஏலமிட்டு 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவும், மீதமுள்ள தொகையில் 5 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கு வழக்கு செலவு தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தவிட்டது.
இவ்வழக்கு நீதிபதி மோகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் டிஎஸ்பி புகழ் வேந்தன் ஆஜரானார். ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துக்களை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 40 நாட்கள் அவகாசம் கோரினார். இதனை ஏற்ற பெங்களூரு நீதிமன்றம், இது தான் கடைசி அவகாசம், அதற்குள் கண்டிப்பாக சொத்து அறிக்கையை தாக்கல் செய்தாக வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், வழக்கை வரும் நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.