இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் மத்திய அரசின் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. காசா தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ளது. இங்கு ஹமாஸ் குழுவினரின் ஆதிக்கம் உள்ளது. இந்த ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஆயுத மோதல் நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை முன்னெடுத்தது. ஏவுகணைகள் மழைபோல இஸ்ரேலை நோக்கி பாய்ந்தன. இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டும் இன்றி கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்தது. இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிலில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வன்முறையாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக உள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே, இஸ்ரேலில் சிக்கியுள்ள மேகலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேரை மீட்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் கான்ட்ராட் சங்மா கூறியிருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சக உதவியை நாடியிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேரும் பத்திரமாக இருப்பதாகவும் எகிப்து அருகே வந்து விட்டதாகவும் கான்ராட் சங்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இன்று இரவோ நாளையோ நாடு திரும்புவார்கள் எனவும் கான்ராட் சங்க்மா தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் இருந்து ஜெருசலேம் நகருக்கு புனித பயணமாக சென்ற போது இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக சிக்கியதகாவும் இதில் ராஜ்யசபா எம்.பி கார்லுகி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.