பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 2014ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நான்கு பேரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தொடர்ந்து, தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனை, விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த புதன் கிழமை பரபரப்பு தீர்ப்பளித்தது. பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் தொடர்ச்சியாக, முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 6 பேருக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உதகையில் இருந்து காணொளி வாயிலாக சட்ட வல்லுனர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி மற்றும் எம்.பி.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.