டெங்குவையே ஒழிக்க முடியல.. சனாதனத்தை ஒழிக்கப் போறீங்களா?: தமிழிசை

டெங்குவைப் போல சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்களால் டெங்குவைக் கூட ஒழிக்க முடியவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. சமீபத்தில் தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக அரசு இந்து கோயில்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதுபோல சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களில் கை வைக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கோயில்கள் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டார். பிரதமர் மோடி அவதூறான, தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், கோயில் விவகாரத்தை மையப்படுத்தி தமிழக அரசை விமர்சித்து வருகிறார். ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்ற வழக்கம் இருக்கும் நிலையிலும், தொடர்ந்து வெளிப்படையாகவே தமிழக அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையில் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்து மதம் குறித்தும் ஆன்மீகம், சனாதனம் குறித்தும் தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை. சனாதனத்தை டெங்குவை ஒழிப்பது போல ஒழிப்போம் என்று கூறுகிறவர்களால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை. இந்து மதத்தை விமர்சிப்பது போல மற்ற மதத்தினரின் வழிபாட்டு முறைகளை விமர்சிக்க முடியுமா” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதில் ஒன்றில் கூட கலந்துகொள்ளவில்லை என்று சுட்டிகாட்டிய தமிழிசை சவுந்தரராஜன், “காவிரி விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்க்க வேண்டும். விவசாயிகளை காவிரி விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. காவிரி பிரச்னையை சட்ட ரீதியாக மட்டுமின்றி நட்பு ரீதியாகவும் தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.