காவிரி விவகாரத்தில் தீர்மானம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது: அண்ணாமலை

காவிரி விவகாரத்தில் தீர்மானம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது என்றும் விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் முயற்சியால், 2018 ஆம் ஆண்டு, காவிரி நதி நீர் ஆணையம் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

தீர்மானத்தின் மீதான சட்டசபை விவாதத்தில், தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, சட்டசபை உறுப்பினரான அக்கா திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசியபோது, முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதுமாக, திமுகவின் ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் எல்லாம் வெளிவந்து விடுமோ என்ற பதட்டம் தான் தெரிந்ததே தவிர, விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, திமுக ஆட்சிக் காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி காலாகாலமாக மக்களை ஏமாற்றி வருகிறது திமுக. தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுகவின் துரோக வரலாறு மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்குமாறு மத்திய அரசு உத்தரவிடக் கோரி தமிழக சட்டசபையில் இன்றைய தினம் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அதை தாங்கள் ஏற்கவில்லை என பாஜகவினர் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.