மீண்டும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இரு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்றக் காவல் 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜூன் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20ம் தேதிகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். நேற்றைய சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.