புதிய கல்விக்கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழி வகைகள் இருக்கின்றது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘எண்ணித்துணிக’ என்னும் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு தமிழக அரசியலில் விவாதப்பொருளாகும் வகையில் பல நேரங்களில் அமைந்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது பேச்சிலும் அவ்வப்போது இதை பிரதிபலிக்கும் விதாக கருத்து கூறி வருகிறார். இதனால், ஆளும் திமுகவும் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடியை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், உலக மனநல நாளை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில் எண்ணித்துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனநல ஆரோக்கியம் சார்ந்த ஆளுமைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
தாய், தந்தைகள் குழந்தைகள் அருகில் இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் பிரித்து வைக்கின்றன. பெற்றோர் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பார்ப்பது இல்லை. உங்கள் மனதை எப்படி கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதற்கு யோகா உதவும். இந்தந்த யோகா செய்தால் தான் சரி என்று இப்போது பல விளம்பரங்கள் எல்லாம் வருகிறது. ஆனால் யோகா நமக்கு வலி ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழி வகைகள் இருக்கின்றது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும். உங்களால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்யுங்கள், உங்களால் தான் எல்லாம் முடியும். நீங்கள் தான் எல்லாம் என்று எண்ணம் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.