காவிரி: இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம்!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கி உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரியில் உரிய நேரத்தில் தேவையான நீரை திறந்து விடாமல் பிடிவாதமாக உள்ளது. இதன் காரணமாக டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கருகிய நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையின்படி 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவை அறிவுறுத்தியது. இதனை எதிர்த்து விவசாயிகள், கன்னட அமைப்புகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கர்நாடகா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், தஞ்சாவூரில் கடந்த 7 ஆம் தேதி திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன்,விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் தெய்வ சிகாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல விவசாய சங்க பிரிதிநிதிகள் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் எஞ்சி இருக்கும் குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை தொடங்கவும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு மாதா மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரக்கோரி தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்களை நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்து உள்ளார்கள். அதன்படி திமுக விவசாய அணி உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் இன்று போராட்டத்தில் குதித்து உள்ளனர். காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி உள்ளதால் கடைகள் அடைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பந்த் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.