காவிரி, 100 நாள் வேலைத் திட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து அக்.16-ம்தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என தூண்டிவிட்டு கர்நாடகத்தில் போராட்டம் நடத்தும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழகத் துக்கு வழங்க வேண்டிய நீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை வலியுறுத்திய பின்பும் பாராமுகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், 100 நாள் வேலைதிட்ட நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் அக்.16-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சியில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.