லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கை விசாரிக்க பெங்களூர் நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவிட்டால் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கோச்சடையான்’. மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடமிருந்து மீடியா ஓன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ரூ. 6.2 கோடி கடன் பெற்றிருந்தார். முரளி கடன் பெறுவதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந்தார். ஆனால், அதிக செலவில் எடுக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படம், ரசிகர்களை பெரிதும் ஈர்க்காததால் பெரியளவில் வசூலை ஈட்டவில்லை.
இந்த நிலையில், கடனாகப் பெற்ற பணத்தை மீடியா ஓன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பித் தரவில்லை எனக் கூறி, ஆட்-பியூரோ நிறுவனம் பெங்களூர் முதன்மை நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது மோசடி செய்து ஏமாற்ற முயற்சி, ஆதாரங்களைத் திரித்தல், தவறான அறிக்கை சமர்ப்பித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் திரித்தல் செய்த பிரிவுகளின் கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூர் முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்தது.
கர்நாடக உயர் நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூர் நீதிமன்ற விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூர் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதோடு மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.