கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சதி நடக்கிறது. எனவே, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது தெளிவாக தெரியும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளே துணை போவது கண்டிக்கத்தக்கது.
குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த, தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த மாணவி சுர்ஜிதா கடந்த 6-ஆம் தேதி ஐயத்திற்கிடமான வகையில் அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதை மூடி மறைப்பதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், தமது தற்கொலைக்கு காரணமானவர்கள் மூவர் குறித்து மாணவி சுர்ஜிதா எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் வெளியானதையடுத்து அதுகுறித்த விவரங்கள் தெரியவந்தன. இவ்வளவுக்குப் பிறகும் மாணவியின் தற்கொலைக்கு காரணமான மருத்துவக் கல்லூரி பேராசிரியர், சக மாணவி, மாணவர் ஆகிய மூவர் மீதும் வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், காப்பாற்ற விசாரணை அதிகாரியும், உயரதிகாரிகளும் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பேராசிரியர் உள்ளிட்ட மூவரும் மாணவி சுர்ஜிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அதிக அளவாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது பிணையில் வெளிவரமுடியாத குற்றப்பிரிவு ஆகும். இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சேர்க்கப்படவில்லை. அதனால், இந்த வழக்கு நியாயமாக நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் நீதி கிடைக்காது; குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது உறுதியாகும்.
சர்ச்சைக்குரிய மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல. ஒரு பரபரப்பான திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு அங்கு குற்றங்களும், விதிமீறல்களும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் அங்கு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் இளநிலை மருத்துவ மாணவ, மாணவியர் என்றும், அதனால் அவை குறித்த விவரங்கள் வெளியுலகிற்கு வரவில்லை என்றும் தெரிகிறது.
சுர்ஜிதா முதுநிலை மருத்துவ மாணவி என்பதாலும், தமது தற்கொலை கடிதத்தை அவரே பலருக்கு அனுப்பியதாலும் தான் இந்த செய்தி வெளியுலகிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பலவகையாக கொடுமைகளே காரணமாகும்.
கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டும், தகுதியின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் மாணவர் சேர்க்கைக்குப் பிறகு கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால், அவர்கள் செய்யும் சிறிய தவறுகளைக் கூட பெரிதாக்கி பல்லாயிரக்கணக்கில் தண்டம் விதித்தும் கொடுமைப்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
முதுநிலை மருத்துவ மாணவி சுர்ஜிதாவின் தற்கொலை மட்டுமின்றி, இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அதற்காக, தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கொடுமைகள் மற்றும் தற்கொலைகள் குறித்து, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.