பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை போல் தங்கம் தென்னரசும் பொய் சொல்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று சட்டமன்றத்தில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதாகவும் சாடினார். மேலும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் மத்திய அரசு எப்படி நிதயை பகிர்ந்தளிக்கிறது என்றும் ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும் கடந்த 2014-2015 முதல் 2022-2023 வரையிலான நிதி ஆண்டு வரை மட்டும் மத்திய அரசின் நேரடி வரியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ரூ.5.16 லட்சம் கோடி என்றும் இந்தக் காலகட்டத்தில் 2.08 லட்சம் கோடி ரூபாய் மட்டும் தான் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளித்துள்ளது என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவீட் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொய் கூறி வந்தார் என்றும் அதே பாணியில், தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் பொய் கூறிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2014 முதல் 2022 வரை, மத்திய அரசின் நேரடி வரி வருவாயில், தமிழகத்தின் பங்கு ரூபாய் 5.16 லட்சம் கோடி என்றும், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு ரூபாய் 2.08 லட்சம் கோடி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதை குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு 2.46 லட்சம் கோடி என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய உதவித் தொகை, 2.30 லட்சம் கோடி ரூபாய் என்றும் தமிழகத்தில் இருந்து கிடைத்ததாக அமைச்சர் கூறும் 5.16 லட்சம் கோடி வரி வருவாயில், நேரடி நிதியாகவே கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி 4.77 லட்சம் கோடி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் கூறும் 2.08 லட்சம் கோடி ரூபாய் கணக்கை எப்படிக் கணக்கிட்டார் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 2004 – 2014 பத்தாண்டு கால காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு மற்றும் உதவித் தொகை, வெறும் 1.5 லட்சம் கோடிதான் என்று கூறியுள்ள அண்ணாமலை, காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தை விட, மூன்று மடங்கு அதிகமாக, பிரதமர் மோடி தமிழகத்துக்கு நேரடி நிதியாக வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுகங்கள், மருத்துவக் கல்லூரிகள், உள்ளிட்ட தமிழக உட்கட்டமைப்பு மேம்பாடுக்காகவும், மாநில அரசின் தலையீடு இல்லாமல், மத்திய அரசு நேரடியாக வழங்கும் நலத் திட்டங்கள், மானிய விலையில் ரேஷன் அரிசி என கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூபாய் 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும் என்றும் அண்ணாமலை தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் வரிப் பங்கீடு, மற்றும் திட்டங்களின் மதிப்பு, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்போது, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் பொய்கள் இனியும் செல்லுபடியாகாது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.