மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், பெண்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நாளை மறுதினம் (சனிக்கிழமை) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுஷ்மிதா தேவ, பீகார் மாநில உணவுத் துறை மந்திரி லேஷி சிங், டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மகளிரணி பொதுச்செயலாளர் ஆனி ராஜா உள்பட “இந்தியா” கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாநாடு நடைபெற உள்ள சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை கனிமொழி எம்.பி. நேற்று பார்வையிட்டார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் கனிமொழி எம்.பி.கூறியதாவது:-
இந்த மாநாடு கலைஞரின் நூற்றாண்டின் ஒரு அங்கமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நாட்டில் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றியும், மணிப்பூரில் இன்றும் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்படும். வாக்காளர்களில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்களின் குரலை பதிவு செய்யக்கூடிய மாநாடாக இது நடக்கிறது.
எல்லோரும் ஆதரித்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா. தொடர்ந்து அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கலைஞரும், அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி வரும் மசோதாவாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2 முறை ஆட்சிக்கு வந்த பிறகு இப்போதுதான் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்கள். அதனை கொண்டு வரும்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு முடிய வேண்டும். அதன் பிறகு தான் செயல்முறைக்கு வரும் என்று சொல்கிறார்கள். இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதையேதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சொன்னார். தேர்தலுக்கு முன்னதாக பெண்களை ஏமாற்றுவதற்கு ஒரு கண்துடைப்பு நாடகமாக மத்திய பா.ஜ.க. அரசு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டுவந்துள்ளது.
5 மாநிலங்கள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக இருக்கிறது. மக்கள் இன்னும் ஏமாறாக தயாராக இல்லை. இவ்வளவு ஆண்டுகளாக வாக்குறுதிகள் எதையும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றாத சூழ்நிலை உள்ளது. மேலும் மதத்தை அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிற நிலையை மக்கள் ஒதுக்க தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.