பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகியுள்ளதாகா தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டெல்லியில் இருந்து கவுகாத்தி செல்லும் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து காமாக்யா நோக்கிச் செல்லும் போது ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இரவு 9.35 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தை விட்டு விலகிய ரயிலின் 5 பெட்டிகள் தரையில் உருண்டு கவிழ்ந்தன. இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி கீழே இறங்கினர். மேலும் தடம் புரண்ட 5 பெட்டிகளில் இருந்த பயணிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த ரயில்வே போலீசாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்களும் மீட்புப்பணியில் இறங்கியுள்ளனர். ரயில் விபத்து நடந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செல்போன் லைட் மற்றும் டார்ச் லைட் உதவியுடன் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், “பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், மாவட்ட நிர்வாகம், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒரே குழுவாக பணியாற்றி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் அறை இயங்குகிறது. மீட்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகு உடனடியாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.