கர்நாடகாவைப் போல தமிழகத்தில் நடிகர்கள் போராடுவதில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரத்குமார் “நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வேண்டியதில்லை. கலைஞனுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைப்பவன் நான்” என்று கூறினார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய நடிகர் சரத்குமார், “தமிழகத்தில் விவசாய சாகுபடிக்கு நீர்வரத்து தேவை. உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் கர்நாடக மாநிலம் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கிறது. அங்கே சாதகமான அரசு இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை. ஒரு நாட்டுக்குள் இந்தப் பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை என்பதுதான் கேள்வி. இதில் மத்திய அரசு தலையீட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்கள். அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.
அவரிடம், ‘காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் நடிகர்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லையே?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்க்க வேண்டியதில்லை. இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இன்று பான் இந்தியா திரைப்படங்கள் உருவாகி எல்லா துறையினரும் கலந்து நடிக்கிறார்கள். கலைஞனுக்கு அழுத்தம் தரக் கூடாது என நினைப்பவன் நான். மிகப் பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றம், மத்திய அரசு கைவிட்டு சூழல் பெரிதாகும்போது வேண்டுமானால் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள்” என்றார்.