“2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீங்கள் 10 வருடம் கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு என்ன பணம் வந்தது” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடங்களை பார்வையிட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் செய்ய வேண்டியது குறித்து பார்வையிட்டேன். பிரசவத்திற்கு வரக்கூடிய பெண்களுடன் வரக்கூடியவர்களுக்கு தங்கும் இடத்திற்கான வசதி குறைவாக உள்ளதாக சொல்லி உள்ளனர். இது குறித்த திட்டமதிப்பீடு குறித்து கேட்டுள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்குகள் என சொல்வதை ஏற்க முடியாது. வருபவர்களுக்கு உரிய மருந்துகளை ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளோம்.
நேற்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை உடன் நடக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு என பேசி உள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீங்கள் 10 வருடம் கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு என்ன பணம் வந்தது. திட்டத்திட்ட மூன்று முதல் நான்கு மடங்கு நிதி நீங்கள் கூட்டணியில் இருந்ததை விட பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.
கோவை மற்றும் சுற்று வட்டார கொங்கு பகுதிகளில் இருந்து வரும் வருமானத்திற்கு மாநில அரசு எத்தனை நிதியை திருப்பி செய்துள்ளீர்கள். எல்லா மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகளை அரசு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து வரும் நிதியை மற்ற மாநிலங்களுக்கு தருகிறோம் என்றால் கோவையில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யபட்டதற்காக கேட்கிறேன். கோவையில் இருந்து வரும் வருமானத்தை எடுத்து முழுவதும் இங்கு செலவு செய்கிறீர்களா? அல்லது மற்றப்பகுதிகளுக்கு செலவு செய்கிறீர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.