காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்து சொல்ல மறுத்த நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி தரக் கூடாது என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை திறக்க கர்நாடகாத்தில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த கட்சிகளின் தூண்டுதலால் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த், எல்லை பந்த் என ஏகப்பட்ட் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கன்னட திரை உலகமும் இப்போராட்டங்களில் பங்கேற்றன. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நிற்காவிட்டால் நடிகர் ரஜினிகாந்த் படங்களை ஓட விடமாட்டோம்; ரஜினிகாந்தை கர்நாடகாவுக்குள் நுழைய விடமாட்டோம் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த். அப்போது காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் ரஜினிகாந்த், எந்த ஒரு பதிலும் சொல்லாமலேயே அமைதியாக போய்விட்டார். இது தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதற்கு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த பிரிவின் தலைவர் ஆர்எஸ் ராஜன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், கர்நாடகாத்தில் பிறந்தவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் சினிமாவில் நடித்து வருமானம் ஈட்டுகிறார். ஆனால் தமிழர் நலனுக்காக ஒருபோதும் பேசுவதில்லை. இப்போது கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக் கூடாது என்கிற போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை. இது தொடரபாக செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போதும் பதில் சொல்லாமல் போய்விட்டார். தற்போது 170வது படப்பிடிப்புக்கு கன்னியாகுமரி வருகிறார் ரஜினிகாந்த். காவிரி நீர் கிடைக்காமல் காவிரி டெல்டா விவசாயிகள் துயரத்தில் இருக்கின்றனர். காவிரி டெல்டா பயிர்கள் கருகிவிட்டன. இந்த துயர நிலையில் கன்னியாகுமரியில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.