தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் தி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக சாடினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஒரு நல்ல அரசு என்பது சுகாதாரம், கல்வி, தொழில் துறை, ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்று சொல்வார்கள். உணவு பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் துறையில் புதிய உச்சத்தை தமிழக அரசு எட்டியுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு பெரும்பாலான மாநிலங்கள் ஒரே நிலையில் தான் இருந்தன. எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் தான் இருந்தன. தென் மாநிலங்கள் குறிப்பாக சொல்வது என்றால் தமிழ்நாடு. இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது இங்கு நடந்த சமூக பொருளாதார புரட்சிதான் காரணம். உழுதவருக்கே நிலம் சொந்தம் என்ற நில உச்ச வரம்பு சட்டத்தை கொண்டு வந்து ஏழை எளிய மக்களுக்கு நிலம் வழங்கியவர் கருணாநிதி. உணவு உற்பத்தியை பெருக்கியதோடு உணவு பொருட்களை குறைந்த விலைக்கும் கட்டணம் இன்றியும் அனைவருக்கும் கொண்டு சேர்த்தது திமுக அரசு. இன்றைக்கு இந்தியாவிலேயே முன்னோடி உணவு கொள்முதல் மற்றும் விநியோக அமைப்பாக தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உள்ளது. தமிழ்நாட்டின் பொதுவிநியோக முறை மிகவும் வலிமையானது.
சுகாதாரம் மற்றும் கல்விக்கு திமுக அரசு மிகுந்த முக்கியத்தும் அளிக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த 1970 களில் மத்திய அரசு, மாநில அரசை வலியுறுத்தியது. இந்த கொள்கை அரசியல் அமைப்பு திருத்தம் மூலம் கைவிடப்பட்டது. அதன்பிறகு அரசியலமைப்பில் 1976- ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 2000 ஆம் ஆண்டு வரை தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு இந்த விவகாரம் மீண்டும் வந்த போது தொகுதிகளை இழக்கக் கூடிய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், 2001-ல் அந்த தடை 2026 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. எனவே, தொகுதி மறுவரையை நம்மை எப்படி பாதிக்க போகிறது? தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களும் லோக்சபாவில் தங்கள் பங்கை இழக்கப் போகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. லோக்சபாவில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதி மறுவரையறை செய்யபட்டால் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்கக் கூடும். தற்போது 39 தொகுதிகளாக இருக்கும் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை 31 ஆக குறையும். தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கும் முயற்சியாகும்.
தொகுதி மறுவரையறை என்பது நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். நமது உரிமைகளை பறிக்க மேற்கொள்ளப்படும் சதியை கவனத்தில் வைத்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம். துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பது இல்லை. அதிகாரத்தை தன்வசமே குவிக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது. நீட் மற்றொரு பேரழிவாகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு திணிக்க்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.