பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சத்தில் உள்ளது. ஒரு வாரமாக நடந்து வரும் இந்த போர் மிக நீண்ட போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. போரின் ஆறாவது நாளில், இஸ்ரேலில் 222 வீரர்கள் உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறி உள்ளது. இந்த போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும், இஸ்ரேல் – பாலஸ்தீன வரலாற்றில் இந்த காசா போர் மிகப்பெரிய போராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போரில் உலக நாடுகள் கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன. மேற்கு உலகம் ஒரு மாதிரியும், மத்திய கிழக்கு நாடுகள் ஒரு மாதிரியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தியா இதில் தனி பாலஸ்தீன நாடு என்று கோரிக்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே அதே நிலைப்பாடு தொடரும் என்று தற்போது தெளிவாகி உள்ளது. பாஜக வந்த பின் இஸ்ரேல் நாட்டுடன் நெருக்கமாகிக்கொண்டே இருந்தது. இஸ்ரேலுடன் நட்பாக பழகியது. இந்த போரின் போது கூட பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினார். இவர்கள் நெருக்கமாக பழகி வந்தனர். பாஜக அமைப்பினர் பலர் பாலஸ்தீனத்தை எதிர்த்து வந்தனர். அதோடு இஸ்ரேல் – இந்தியா ஒன்று என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில்தான், மத்திய அரசு தற்போது பாலஸ்தீன அரசு நிலைப்பாட்டிற்கு சென்றுள்ளது.
இது தொடர்பாக, பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக எங்களின் கொள்கை நீண்டகாலமாக மாறாமல் நிலையாக உள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ‘
இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்றவை நேரடியாக இஸ்ரேலை ஆதரித்து வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவும் தற்போது அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.