மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளி: அண்ணாமலை

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் 20-க்கும்மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், 22 அரசு மற்றும் 50 அரசுஉதவி பெறும் சிறப்புப் பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் தனியாரால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள்கூட இல்லை என்பதை தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கான அரசுப்பள்ளிகளில், காலியாக இருக்கும் 38 சதவீத அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதையும், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கைகள் உருவாக்குவது குறித்து, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மாநில ஆலோசனைக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருப்பதாக, தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. உடனடியாக, காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்காக, குறைந்தது ஒரு சிறப்புப் பள்ளி வீதம் திறக்க திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.