‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை: அண்ணாமலை

“பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக சார்பில் நடந்த மகளிர் உரிமை மாநாட்டில் மோடி கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்தார்கள். எந்தவித பின்னணியும் இல்லாமல் அரசியலில் பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைக்கும் வகையில் சாதாரண பெண்ளுக்காக அந்த ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தனை காலமாக யாரும் கொண்டு வர துணியாததை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் சோனியாகாந்தியும், பிரியங்கா காந்தியும் கவனமாக இருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்னர் திமுகவினர் போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை மிரட்டுகின்றனர் என்றார்.

கேள்வி:- தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக ஈவிகேஎஸ் சொல்லி இருக்கிறாரே?

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கட்சியை கடுமையாக உழைத்து வளர்ச்சியில் கொண்டு வந்துள்ளனர். அவரின் சான்றிதழுக்காக நாங்கள் கட்சியை நடத்தவில்லை.

கேள்வி:- திமுகவை விமர்சிக்கும் நீங்கள் அதிமுகவை விமர்சிப்பது இல்லையே?

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பர்கள் திமுகவினர்தான். அவர்களை எதிர்த்து செய்யக் கூடிய தவறுகளை ஆக்கப்பூர்வமாக வைப்பது எதிர்க்கட்சியின் கடமை.

கேள்வி:- விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து உதயநிதி ஸ்டாலின் சொல்லி உள்ளாரே?

விளையாட்டை விளையட்டாக பார்க்க வேண்டும் என்றால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் ஏன் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சொல்லி உள்ளார். இந்தியா எப்போதும் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்ச கௌரவமும், மரியாதையும் கொடுத்துள்ளோம். சென்னையில் பாகிஸ்தானுக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்துள்ளோம். பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்கிறோம், சில நேரங்களில் உணர்ச்சிகள் வெளிவந்துவிடுகிறது. இதனை சொல்லும் அருகதை உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை.

கேள்வி:- பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு மிகப்பெரிய சுமை இறங்கி உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லி உள்ளாரே?

அது அவர்களின் சொந்த கருத்தாக பார்க்கிறேன். ஒரு கருத்துக்கு பதில் சொல்லி நான் பிரச்னையை வளர்க்க விரும்பவில்லை.

கேள்வி:- அடுத்த கட்ட நடைபயணம் எப்படி இருக்கும்?

நாளை காலை அவிநாசியில் நடைபயணத்தை தொடங்குகிறேன். அடுத்த சில நாட்களுக்கு காலையும், மாலையும் நடைபயணம் நடைபெறும். பியூஷ்கோயல் நாளை வருகிறார்.

கேள்வி:- ஒற்றை கட்சி ஆட்சியை மோடி கொண்டு வர நினைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி உள்ளாரே?

10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அதிக நிதியை பிரதமர் கொடுத்துள்ளார். கானல் நீர் போல் கனவு காண்பதுபோல் ஒற்றை ஆட்சி என முதல்வர் சொல்கிறார். அவரே ஒற்றையாட்சி குறித்து பயந்து கொண்டு இருக்கிறார்.

கேள்வி:- இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை பற்றி பாஜக நிலைப்பாடு என்ன?

சபாநயகர் அவர்கள் கன்னியமான இருக்கையில் உள்ளார். வானதி அக்கா அவர்கள் இது குறித்து 2 முறை பேசும் போது மைக் ஆஃப் செய்கிறார். சபாநாயகர் அவர்கள் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை தீவிரவாதமாக பாஜக பார்க்கிறது. அதை மதமாக பார்க்கவில்லை. கோவையில் இன்று தீவிரவாத செயல்பாடுகள் அப்படியே உள்ளது. என்.ஐ.ஏ இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. தீவிரவாதிகள் மக்களின் உயிரை எடுக்க துணிந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். தமிழ்நாடு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கண்காணிப்பில் உள்ளது. நிச்சயமாக இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.