ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பியது குறித்த கேள்விக்கு 10 முறை ஜெய் ஶ்ரீராம் சொன்ன எல்.முருகன்!

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு 10 முறை ஜெய் ஶ்ரீராம் என மட்டுமே மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இப்போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் ஜெய் ஶ்ரீராம் என அரங்கம் முழுவதும் கோஷங்கள் இடைவிடாமல் எழுப்பப்பட்டன. இது மிகப் பெரும் சர்ச்சையானது. திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முதலில் இந்த ஜெய் ஶ்ரீராம் கோஷத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், விளையாட்டுப் போட்டிகளில் இது போல வெறுப்பை கக்கும் முழக்கங்களை எழுப்பக் கூடாது என கண்டனம் தெரிவித்தனர். மேலும் 1999-ல் சென்னையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் வென்ற போதும் சென்னை ரசிகர்கள் எப்படி கண்ணியத்துடன் நடந்து கொண்டனர் என வீடியோ பதிவையும் வெளியிட்டனர். இந்த விவாதம் சமூக வலைதளங்களில் களைகட்டியது. அதே நேரத்தில் பாஜக தலைவர்கள், ஜெய் ஶ்ரீராம் கோஷத்தை நியாயப்படுத்தி வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் திருப்பூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை இன்று தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்கள் ஜெய் ஶ்ரீராம் கோஷம் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, நான் இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லனும்னா ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் என சொல்லிக் கொண்டே நகர்ந்தார். செய்தியாளர்கள் இடைவிடாமல் கேட்ட போதும் மொத்தம் 10 முறை ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் என்பதை மட்டுமே மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார். இதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.