இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை: அண்ணாமலை

இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும், இந்திரா காந்திக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எப்படி இருந்தது என்பது பற்றியும் அண்ணாமலை ப்ளாஷ்பேக் கூறினார்.

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வந்த ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணத்தின் மூன்றாம் கட்டம் திருப்பூரில் நேற்று தொடங்கியது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் வந்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, திமுக மகளிர் மாநாட்டையும், அதில் பேசப்பட்ட விஷயங்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

திமுகவின் மகளிர் மாநாட்டை பற்றி நிறைய பேசிவிட்டேன். இன்னொரு முக்கியமான விஷயம், இந்த மாநாட்டை கனிமொழி ஏன் நடத்தினார் என்று யாருக்காவது தெரியுமா? தன்னுடைய அண்ணன் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி, சனாதனத்தை பற்றி எதையோ பேசி ஃபேமஸ் ஆயிட்டான். இப்போ கனிமொழி அக்கா என்ன யோசிச்சாங்க. உதயநிதியை பற்றி எல்லோரும் பேசுறாங்க. நம்மள பத்தி யாரும் பேச மாட்றாங்களே என்று யோசித்துதான், ஒரு மாநாட்டை நடத்தியாவது ஃபேமஸ் ஆகிட மாட்டோமானு நினைச்சு, மகளிர் உரிமை மாநாட்டை நடத்தி இருக்காங்க.

இந்த மாநாட்டுல முதல்வர் ஸ்டாலின் பேசுனதை யாராவது கவனீச்சீங்களா? சோனியா காந்தியை பார்த்து மு.க. ஸ்டாலின் சொல்றாரு. எங்க அப்பா கருணாநிதி உங்க அத்தையை (இந்திரா காந்தி) பார்த்து, “நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக” என சொன்னாராம். அப்படி ஒரு பந்தம் அவங்களுக்குள்ள இருக்குதாம். அந்த பந்தத்தை பற்றி கொஞ்சம் பாத்துருவோமா.. 1976-ல் காங்கிரஸ் ஆட்சி சர்க்காரியா கமிஷன போடுறான். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கமிஷனை போட்டு, திமுகவோட ஊழலை காங்கிரஸ் விசாரிக்குது. இதுதொடர்பான அறிக்கையை கமிஷன் சமர்ப்பிக்குது. திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் பண்ணிருக்காங்கனு கமிஷனில் சொல்லப்பட்டிருக்கிறது. கருணாநிதிக்கு தெரிந்துவிட்டது. எப்படியும் நம்ம ஆட்சியை கலைச்சிருவாங்கனு. உடனே கருணாநிதி என்ன பண்றாரு.. காங்கிரஸுட்ட போய் நான் உங்க கூட கூட்டணி வெச்சிக்குறேன். கமிஷன் ரிப்போர்ட் சம்பந்தமாக எதுவும் பண்ணாதீங்கனு சொல்றாரு.

இதை உறுதி செய்யும் வகையில் 1980-இல் மத்திய புலனாய்வுத் துறையின் வழக்கறிஞர் நம்பீசன் என்ன சொல்றாரு தெரியுமா? கருணாநிதி மேல உள்ள 2 வழக்குகளை என்னால் நடத்த முடியாதுனு சொல்றாரு.
இதன் தொடர்ச்சியாக, கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷன், புலனாய்வுத் துறை மூலமாக தொடுத்த வழக்குகள் தள்ளுபடி ஆகுது. அப்போ தான் கருணாநிதி சொல்றாரு. நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருகனு கூப்பிடுறாரு. அன்று கருணாநிதி அப்படி சொன்னார். இன்று மு.க. ஸ்டாலின் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா.. ராகுல் காந்தியே வருக.. நல்லா கொள்ளையடிக்கலாம் ஆதரவு தருக என்றுதான் சொல்ல வேண்டும்.

தாய்மார்களின் இரும்பு கோட்டையாக பா.ஜனதா விளங்கி வருகிறது. பெண்களின் வாக்கு பா.ஜனதா கட்சிக்கு உள்ளது. தி.மு.க. அரசு, இந்து சம்பிரதாயங்களை அழித்துவிட்டு, கோவில் சிலை திருட்டுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது. 2 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை காணவில்லை.

சனாதன தர்மத்தை அழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னால், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. என்ற கட்சியை அழித்து, இருக்கும் இடமில்லாமல் செய்வீர்கள் என்று நம்புகிறோம். ‘அனைவரும் சேர்ந்து நன்றாக கொள்ளையடிக்கலாம் வாங்க’ என்பதே காங்கிரஸ்-தி.மு.க.வின் புதிய கொள்கை. ஆனால் பிரதமர் மோடி நேர்மையாக ஆட்சி செய்கிறார்.

உங்களில் ஒருவனாக இருக்கும் கட்சி பா.ஜனதா. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்து மறுபடியும் பிரதமர் மோடி 400 எம்.பி.க்களுடன் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை அமர்த்தி அழகுபார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.