காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று திருச்சியில் சீமான் கூறினார்.
திருச்சியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது விமான நிலையத்தில் இருந்த பேரிகார்டுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து விமான நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட கட்சியினர் 13 பேர் மீதும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உள்பட அக்கட்சியினர் 6 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் உள்பட 12 பேர் நேரில் ஆஜர் ஆனார்கள். ம.தி.மு.க.வினர் ஆஜர் ஆகவில்லை. இந்த வழக்கில் புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் 2-வது சாட்சி நேரில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் ஓட்டுக்காக கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்தில் நீட் தோ்வு எழுதும் மாணவ-மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகித்தான் தேர்வு மையத்திற்குள்ளேயே நுழைகிறார்கள். ஆனால் நீட் தேர்வில் வட மாநிலங்களில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேர்வுகளை எழுதும் மிக மோசமான நிலை உள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கினாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அளிக்க இதுவரை யாரும் முன் வரவில்லை. அவர்கள் வருவதற்கும் தயாராக இல்லை.
தேர்தலில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். வாக்குப்பதிவுக்கு எந்திரம் பயன்படுத்தும் முறையை ஒழிக்க வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் எல்லை தாண்டிச்செல்லும் தமிழக மீனவர்கள் மீது யாரும் கை வைக்க விடமாட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.