விஜயை தேவையில்லாமல் சொறிந்து விடுகிறார்கள்: சீமான்

“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக மாவட்ட வாரியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

லியோ திரைப்படத்தின் 4 மணி காட்சிகளுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜெய்லர் படத்திற்கு இதுபோன்ற நெருக்கடிகள் ஏதாவது இருந்ததா? என்று சொல்லுங்கள். அதே நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் அவர்களும் பாடலை வெளியிட்டார்கள். இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்திற்கு ஏன் தர வேண்டும். ஏனென்றால் அவர் கட்சி ஆரம்பிக்கபோறார்னு தெரியுது. அதனால் அவருக்கு நீங்கள் நெருக்கடிகளை தருகிறீர்கள். நடிப்பதை நிப்பாட்டிவிடு விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். இது தேவையில்லாமல் சொறிந்து விடுவதுதானே. தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கே கோபம் வருகிறது எனில் இது விஜய்க்கு எப்படி இருக்கும்.

ரெட்ஜெயண்ட் ஒரு படம் தயாரித்தால் இப்படி தீர்ப்பு வருமா? இந்த படத்தை ரெட்ஜெயண்ட் வாங்கி வெளியிடவில்லை என்பதால் நெருக்கடிகள் தரப்படுகிறது. காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவில் இருந்து ஒரு படம் வரும்போது இப்படி இந்த அரசு பேசுமா?, விஜய் கட்சி தொடங்கிவில்லை என்றால் இப்படி செய்வீர்கள்?, கட்சி என்ன உங்கள் குடும்பச்சொத்தா? தமிழ்நாடு என்ன உங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்துள்ளதா?

இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே கோட்டையாக விளங்கும் நாம் தமிழர் கட்சி மக்களை நம்புகிறது. அதன் மூலம் நாட்டை ஆளும் செல்வாக்கை விரைவில் எதிர்பார்ப்போம். மக்களுக்கு நன்மை பயக்காத திராவிட கட்சிகளை நாங்கள் அழிப்போம். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்துவது இயல்புதான். ஆனால், எந்த நோக்கத்துக்காக என்று ஒரு காரணம் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணி எந்த நோக்கத்துக்காக? அந்தப் பேரணி அவசியமற்றது.

மக்களவை தேர்தலையொட்டி தென் மாவட்டங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது வட சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. கட்சி தொடங்கியது முதலே தெரிவித்து வருகிறேன். நாம் தமிழர் கட்சி என்றுமே தேர்தல்களில் தனித்துத் தான் போட்டியிடும். இந்தியா கூட்டணி, பாஜக இது பெரும் கட்சிகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி மக்களிடையே தனித்து களம் காணும். இவ்வாறு அவர் கூறினார்.