மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அம்மாநில தலைநகர் ஐஸ்வால் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிசோரத்தில் நேற்று நான் நடைபயணம் சென்றபோது இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கிடைத்ததைப் போன்ற ஒரு வரவேற்பு கிடைத்ததைப் பார்த்தேன். மிசோரம் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது எம்.பி பதவி பாஜகவால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இங்கே, அனைத்து மதங்களும், கலாசாரங்களும், வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டின் அடித்தளத்தை அமைக்க உதவிய கட்சி காங்கிரஸ். அந்த அடித்தளத்தை பாதுகாத்து நாம் சாதனை படைத்துள்ளோம். நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயல்கிறது. அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும்; மக்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வை. ஆனால், அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் குவிக்க வேண்டும்; அனைத்து முடிவுகளும் டெல்லியில் இருந்தே எடுக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. இந்தத் தருணத்தில் இந்தியாவின் மதிப்பீடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், இந்தியா எனும் சிந்தனையையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
வட கிழக்கு மக்களின் மத நம்பிக்கைகள் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல்களை நடத்துகின்றன. இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் மட்டுமே; ஒரு குறிப்பிட்ட அமைப்பால் மட்டுமே ஆளப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கை. இதைத்தான் நாம் எதிர்க்கிறோம். டெல்லியால் மிசோரம் ஆளப்படக்கூடாது.
ஒரு குறிப்பிட்ட திட்டம் ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால், அதனை மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கங்கிரஸ் கருதுகிறது. உதாரணத்துக்கு, ராஜஸ்தானின் சுகாதாரத் திட்டம், கர்நாடகாவின் சமூக பாதுகாப்பு திட்டம், சத்தீஸ்கரின் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டம் ஆகிய வெற்றிகரமான திட்டங்களை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இந்த திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
மிசோரம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருக்கிறது. வயதானவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக வழங்குவது, கேஸ் சிலிண்டர் விலையை ரூ.750 ஆக குறைப்பது, தொழில்முனைவோருக்கு பொருளாதார அதிகாரத்தைக் கொடுப்பது ஆகிய வாக்குறுதிகளை நாங்கள் வெற்றி பெற்றால் நிச்சயம் நிறைவேற்றுவோம். மிசோரத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம் வேலையின்மைதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வோம். மிசோரத்தின் முழுமையான வளர்ச்சியே எங்களின் இலக்காக இருக்கும்.
மிசோரத்தில் உள்ள ZPM, MNF ஆகிய இரண்டு மாநில கட்சிகளும் பாஜக – ஆர்எஸ்எஸ் மிசோரமுக்குள் நுழைவதற்கான கருவிகளாக உள்ளன. பாஜக – ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு உள்நோக்கங்கள் இருக்கின்றன. வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் என்பதே அது. பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகியவற்றை சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆர்எஸ்எஸ் தொடங்கியதில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம்.
கர்நாடகாவில் பாஜகவை நாங்கள் தோற்கடித்தோம். தெலங்கானாவிலும் தோற்கடிக்க உள்ளோம். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் நாங்கள் பாஜகவை தோற்கடிப்போம். ராஜஸ்தானில் கடந்த முறை பாஜகவை நாங்கள் தோற்கடித்தோம். இம்முறையும் தோற்கடிப்போம். அதே திட்டம்தான் வட கிழக்கு மாநிலத்துக்கும். மிசோரத்திலும் காங்கிரஸ் கட்சி தோற்டிக்கும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.
காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித் ஷா மகன் என்ன செய்கிறார். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?
சிறு குறு தொழில்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை அளிப்பவை அவைதான். அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்க முடியும். ஆனால், பாஜகவின் கொள்கை, சிறு – குறு தொழில் நிறுவனங்களை அழிக்க வேண்டும் என்பதுதான். இதை கருத்தில் கொண்டே ஜிஎஸ்டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாஜக எடுத்தது. இதன்மூலம் அம்பானிக்கு உதவியது. சிறிய வணிகர்களை அழித்துவிட்டு பெரிய தொழிலதிபர்களுக்கு உதவுவதுதான் பாஜகவின் திட்டம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.