சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் இன்று 13 பேர் உயிரிழந்த நிலையில் இது போன்ற சம்பவங்களை இனி விபத்து என்று அழைப்பதை விட லஞ்சக் கொலைகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என பாஜக விமர்சித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்தபோது அருகே இருந்த பட்டாசு விற்பனை கடையில் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதேபோல, சிவகாசி அருகே இன்னொரு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் கடந்த சில வாரங்களாக பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்பட்டு வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் இதுவரை 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடி விபத்து சம்பவங்களை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்துள்ளன. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இது போன்ற விபத்துகள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புரையோடிப் போயிருக்கிற ஊழல், லஞ்சத்தையே இந்த சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது. பெரிய ஆலைகளான சோனி, குருவி மற்றும் ஸ்டாண்டார்ட் போன்ற நிறுவனங்களில் இது போன்ற விபத்துகள் நிகழ்வது இல்லை என்பதே உண்மை. முறையான உரிமம் இல்லாது வாடகை வீடுகளில் பட்டாசுகளை தயாரிப்பதை அனுமதிப்பது, பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தாது, சட்டத்திற்கு புறம்பான வெடிபொருட்கள் பயன்படுத்துவதை கண்டுகொள்ளாதது என்பது போன்ற அனைத்து விதிமீறல்களையும் லஞ்சம் பெற்று கொண்டு அல்லது அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளும், சட்டவிரோதமாக தொழில் நடத்துபவர்களுமே இந்த விபத்துகளுக்கு காரணம்.
இது போன்ற சம்பவங்களை இனி விபத்து என்று அழைப்பதை விட கொலைகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்தாலும், எத்தனை அரசுகள் மாறினாலும் சட்ட திட்டங்களை மதிக்காத மக்களும், விதிகளை கடைபிடிக்காத, அமல்படுத்தாத அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். லஞ்சம், லஞ்சம், லஞ்சம். இது தான் இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம். இனி இவை லஞ்சக் கொலைகள் என்று அழைக்கப்படட்டும். உயிரிழந்தவர்களுக்கு அரசு உடனே நிவாரணத்தை அறிவித்து விடுகிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் சட்ட விரோத தொழிலை செய்பவர்களும், அதை அனுமதித்த அதிகாரிகளும் தான். அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும். அரசு அளித்த நிவாரணத் தொகையையும் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டும். இதற்கு உரிய சட்டம் இல்லையெனில், சட்டம் இயற்றப்பட வேண்டும். கடுமையான சட்டங்களும், உறுதியான நடவடிக்கைகளும் தான் பல உயிர் பலிகளை தடுக்கும். இல்லையேல் இது ஒரு தொடர்கதையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.