மருத்துவ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்: வேல்முருகன்!

குலசேகரம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக, நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் மாணவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அக்கொடுமைகளின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுகிர்தா, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், பேராசிரியர் பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், மயக்கவியல் பயிற்சி மருத்துவர்கள் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும், தன் மரணத்திற்கு இவர்கள் மூவரும் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், மாணவ, மாணவிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது.

பேராசிரியர் பரமசிவம் 14.10.2023 அன்று கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹரிஷ், ப்ரீத்தி ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அக்கல்லூரியில் நடக்கும் கொடூரங்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக, பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கைப்பேசிகளை கல்லூரி நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கல்வி வளாகங்களில் தங்களுக்கு எதிராக ஏவப்படும் வன்முறையை எதிர்த்துப் போராடக்கூடிய வலுவற்றவர்களாக, பாதுகாப்பில்லாத நிலையிலேயே மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மாணவி சுகிர்தா இறப்பே சான்று. பல மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடும் மனபலம் இல்லாமல், கல்வியைத் தொடராமல் விலகும் சம்பவங்கள் தொடர்கதையாகின்றன. மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலையும் தொடர்கிறது.

கல்வி நிலையங்களில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை நமது இளைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இத்தகைய சூழலை தடுத்து பாலின, சாதிய, வர்க்கப் பாகுபாடுகள் களையப்பட்ட சூழல் கல்வி வளாகங்களில் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதே நேரத்தில், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் சமூகம் தங்களுக்குள் உலவும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். பெற்றோர்கள், பாலியல் துன்புறுத்தல் குறித்து தங்கள் பெண் குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்.

மாணவி சுகிர்தா இறப்பில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது எவ்வளவு விரைவாக கடும் தண்டனை கொடுக்க முடியுமோ, அது நடக்க சிபிசிஐடி விரைந்து செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரியில், இதுபோன்ற கொடூரங்கள் ஏற்கனவே அரங்கேறி இருக்கிறதா என்பது குறித்து சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது பாதுகாவலில் நடத்தப்படும் சித்ரவதைக்கு ஒப்பாகும். இதை முற்றிலுமாக அகற்ற முற்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.