கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கா்நாடக கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி ‘கர்நாடகம்-50’ விழாவுக்கான இலச்சினை வௌியிடும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதுல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு, அந்த இலச்சினையை வெளியிட்டு பேசும்போது கூறியதாவது:-
நாம் அனைவரும் கன்னடர்கள். கர்நாடகத்தில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர். இங்கு வசிப்பவர்கள் ஒவ்வொருவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, உத்தரபிரதேச மாநிலங்களில் அங்குள்ளவர்கள் உள்ளூர் மொழியை கற்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் பிற மொழியினர் கன்னடம் கற்காமல் வாழ்க்கையை நடத்த முடியும். இது தான் நமது மாநிலத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் உள்ள வித்தியாசம். கர்நாடக மாநிலம் உருவாகி 68 ஆண்டுகள் ஆகிறது. ஆயினும் கர்நாடகத்தில் கன்னட சுற்றுச்சூழலை முழுமையாக உருவாக்க முடியாமல் இருப்பது சரியல்ல. கன்னடர்கள் நமது மொழியை பிறமொழியினருக்கு கற்பிப்பதை விட அவர்களின் மொழியை நாம் முதலில் கற்றுக் கொள்கிறோம். கன்னடர்களின் இந்த நடை, நமது மொழி, கலாசார வளர்ச்சிக்கு நல்லதல்ல.
நமது மாநிலத்தில் சில பகுதிகளில் பிற மொழியினர் நமது மொழியை பேசுவதே இல்லை. மொழி மீது கன்னடர்களுக்கு அபிமானம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதிக தாராள மனப்பான்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பிற மொழியினர், மதத்தினரை நேசிக்க வேண்டும். ஆனால் நாம் நமது மொழியை மறக்கக்கூடாது. நம்மிடையே ஆங்கில மோகமும் அதிகரித்துவிட்டது. அதிகாரிகள் சிலர் கோப்புகளை ஆங்கிலத்தில் அனுப்புகிறார்கள். மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களுக்கு கடிதம் எழுதும்போது ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். ஆனால் கர்நாடகத்திற்குள் நடைபெறும் விஷயங்கள் கன்னடத்தில் இருக்க வேண்டும். இங்கு கன்னடம் ஆட்சி மொழியாக இருந்தாலும். அதை அலட்சியப்படுத்துவது சரியல்ல. இந்த நிலை மாற வேண்டும்.
1983-ம் ஆண்டு நான் கன்னட காவல் குழு தலைவராக பணியாற்றினேன். இந்த கர்நாடகம்-50 விழா வருகிற நவம்பா் 1-ந் தேதி தொடங்கி ஓராண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். மக்களிடையே கன்னட மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கர்நாடகம் ஒன்றுபடுத்தப்பட்டது. தேவராஜ் அர்ஸ் முதல்-மந்திரியாக இருந்தபோது 1973-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி நமது மாநிலத்திற்கு கர்நாடகம் என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறு சித்தராமையா பேசினார்.