மக்கள் பணத்தில் கட்டி திமுக தலைவர்களின் பெயர் வைப்பதா?: அண்ணாமலை

திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா நினைவு வளைவு என பெயர் சூட்டவும், அணுகு சாலையின் சந்திப்பில் பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவு என பெயர் சூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பு மற்றும் அணுகுசாலை சந்திப்புக்கு, அண்ணா நினைவு வளைவு அன்பழகன் நினைவு வளைவு என பெயர் வைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது. சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள், தலைவர்கள் பெயரை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க ஒரு அவசரக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது நகைப்புக்குரியது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை, பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களது பெயர் சூட்ட வேண்டும் என்றும், வளைவுகளுக்கு, அவரது தளபதி பொல்லான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.