அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்: அண்ணாமலை

அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த பா.ஜனதா கிளை நிர்வாகி மோகன்ராஜ் (வயது 49), அவரது தாயார் புஷ்பவதி மற்றும் சித்தி ரத்தினாம்பாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகிய 4 பேரும் கடந்த மாதம் 3-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்டதால் இந்த பயங்கர கொலைச் சம்பவம் நடந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 4 பேர் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி மோகன்ராஜ் மகன் பிரணவ் (வயது 13) கல்வி செலவு முழுவதையும் பா.ஜனதா ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மதுவால் நடைபெறும் சமூக விரோத செயல்களுக்கு இந்த 4 பேர் படுகொலை சம்பவமே சாட்சி. மதுபானம் அருந்தி மிருகமானவர்களால் 4 குடும்பங்களின் நிம்மதி தொலைந்து உள்ளது. சமூக விரோதிகளையும், குற்றப் பின்னணியில் உள்ளவர்களையும், காவல்துறை கண்காணிக்க தவறிவிட்டது. இங்கு உளவுத்துறை போலீசார் உள்ளனரா என்று சந்தேகம் அளிக்கிறது. தமிழகத்தில் மதுபானத்தை விற்பனை செய்து இளைஞர்களை கொலைகாரர்களாக மாற்றியுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காதது அவர் அமைச்சராக நீடிப்பதால்தான். எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும். தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.