அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நவம்பர் 6 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், கடந்த அக்டோபர் 13-ம் தேதியுடன் முடிவைடந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், உடனடியாக நேற்றே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.