வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை: கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில்!

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கோரியதில் வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை என்று கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “இந்தியாவில் உள்ள எங்களின் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் இந்தியா ஒருதலைபட்சமாக கூறியிருந்தது. இந்த முடிவு உரிய காரணம் இல்லாதது, முன்னெப்போதும் நிகழ்ந்திராதது. தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த கிரகத்தில் எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலியின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கனடா தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்பாக அக்டோபர் 19-ம் தேதி அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையை பார்த்தோம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகள், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறார்கள். இந்த சூழலில்தான், இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையில் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. இதனையடுத்து, இது தொடர்பாக ஒரு வழிமுறையை உருவாக்குவதற்கான பணியில் கடந்த ஒரு மாதமாக கனடா தரப்புடன் நாங்கள் ஈடுபட்டோம்.

தூதரக உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் பிரிவு 11.1 பின்வருவனவற்றைக் கூறுகிறது: “தூதரக பணியாளர்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே எவ்வித ஒப்பந்தமும் இல்லாத நிலையில், தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்திருக்குமாறு ஒரு நாடு, மற்றொரு நாட்டிடம் கோரலாம். இது நியாயமானது; இயல்பானது.” எனவே, சர்வதேச விதிமுறைகளை இந்தியா மீறுவதாக சித்தரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.