காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணைகளின் நீர் இருப்பு, கர்நாடகா மழைப் பொழிவு ஆகியவற்றை கணக்கிட்டு தமிழ்நாட்டுக்கான நீரை திறப்பதற்கு பரிந்துரைக்கும் பணியை ஒழுங்காற்று குழு மேற்கொள்ளும். ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். இதுதான் தற்போதுவரையிலான நடைமுறை. தமிழ்நாடு தரப்பில் 24,000 கன அடி நீரை காவிரி நீரை திறக்க கோரப்பட்டது. ஆனால் வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் காவிரி ஒழுங்காற்று குழு திறக்க பரிந்துரைத்தது. இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டது. இதனை கர்நாடகா ஏற்காமல் சொற்ப நீரை திறந்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியது. அப்போதும் கர்நாடகாவுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இதனையும் கர்நாடகா மதிக்காமல் சொற்ப நீரை திறந்துவிட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பாஜக போராட்டங்களைத் தூண்டிவிட்டது. பல்வேறு பந்த் போராட்டங்களும் நடத்தப்பட்டன. மண்டியாவில் இன்றும் 46 நாட்களைத் தாண்டி போராட்டங்கள் தொடருகின்றன.
பின்னர் 3,000 கன அடிநீரை திறக்க உத்தரவிட்ட போது சொட்டு நீரையும் தரமாட்டோம் என்றது கர்நாடகா. காவிரி ஒழுங்காற்று மீண்டும் ஆய்வு செய்து மேலும் 3,000 கனஅடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா மதிக்கவில்லை. பின்னர் திடீரென தமிழ்நாட்டுக்கான நீர் திறப்பை அதிகரிப்பது, குறைப்பது என போக்கு காட்டி வருகிறது கர்நாடகா. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் வரும் 30-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை எவ்வளவு கர்நாடகா திறந்துவிட்டுள்ளது? என்பதை முழுமையாக ஒழுங்காற்று குழு ஆய்வு செய்ய இருக்கிறது.