எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. இணைந்து செயல்படாது என்று கோவையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. அழிந்து விடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அழிய போகிறவர்கள் அடுத்தவர்களை பார்த்து பேசுவது போல உள்ளது. துரியோதனன் கூட்டம் எப்போதும் வெற்றி பெற்றது கிடையாது. அதுபோலத்தான் எடப்பாடி பழனிசாமி வீழ்வது உறுதி. பிரிந்து சென்ற அ.தி.மு.க. தலைவர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் இல்லை. அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா சொல்லி இருப்பதால், அவரிடம்தான் இது பற்றி மேலும் கேட்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. இணைந்து செயல்பட வாய்ப்பில்லை.
அடுத்த ஆண்டு(2024) ஜனவரி மாதம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பது குறித்து யோசிப்போம். அ.ம.மு.க.-ஓ.பன்னீர் செல்வம் இடையே அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நட்பு நன்றாக இருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அப்போது கூட்டணியில் இருந்தார்கள், இப்போது இல்லை, அவ்வளவுதான். இப்படித்தான் இதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமையுமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது, எங்கள் நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.