கதாபாத்திரம் சிறியது, பெரியது என்றெல்லாம் யோசிக்கவே இல்லை: மடோனா

‘லியோ’ படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் குறித்து விமர்சனங்கள் வெளியானது. இந்நிலையில் கதாபாத்திரம் சிறியது, பெரியது என்றெல்லாம் யோசிக்கவே இல்லை என்று மடோனா கூறியுள்ளார்.

காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல படங்களில் நடித்தவர் மடோனா செபாஸ்டியன். சமீபத்தில் திரைக்கு வந்த ‘லியோ’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார். இதற்கிடையில் ‘லியோ’ படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் குறித்து விமர்சனங்கள் வெளியானது. சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருக்கக்கூடாது என்று பலர் பேசினர். இதற்கு மடோனா செபாஸ்டியன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பெரிய ஸ்டார், பெரிய டீம் என்பதால் ‘லியோ’ படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் எலிசாவாக நான் சில காட்சிகளில் மட்டுமே நடித்தேன். மடோனாவாக நடிக்கவில்லை என்று விமர்சிக்கின்றனர். அப்படி கூறுபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். எனக்கு ஒரு வேலை தருகிறார்கள். முடிந்த அளவு அதை நன்றாக செய்யவேண்டும் என்று நினைத்து செய்தேன். எனவே கதாபாத்திரம் சிறியது, பெரியது என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. என்ன கதாபாத்திரம் என்பது முக்கியமல்ல. அதில் 100 சதவீதம் நமது உழைப்பை கொடுத்தாலே போதும். அந்த கதாபாத்திரம் நிச்சயம் சிறப்பாகவே வரும். நன்றாக பேசப்படும். எனக்கு களரி, மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகள் தெரியும். எனவே லியோ படத்தில் சண்டை காட்சிகளில் சிரமமின்றி நடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.