தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நதிநீரை பங்கிடுவதில் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவிலுள்ள அணைகள் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. காவிரிப் பிரச்னையை தீர்த்து இரு மாநிலங்களுக்கும் உரிய தண்ணீரை வழங்குவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், அதற்கு துணையாக காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கூடி தண்ணீர் திறப்பு தொடர்பாக காவிரி ஆணையம் முடிவு செய்கிறது. ஆனால், ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா தொடர்ந்து வம்பு செய்து கொண்டு உள்ளது. இதனால் டெல்டாவில் நெற் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு போட்டது. வழக்கம் போல தனது வேலையை காட்டிய கர்நாடகா வெறும் உபரி நீரை மட்டுமே திறந்துவிடுகிறது. மீண்டும் வரும் 30ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூடுகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
காவிரி பிரச்னைக்கு ரெடிமேட் தீர்வு எதுவும் வரப்போவது கிடையாது. கர்நாடகா மத்திய அரசையும், காவிரி ஆணையத்தையும் மதிக்கவில்லை. நாம் இன்னும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு ஒரே வழி உச்ச நீதிமன்றம்தான். காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தேன். வட மாநிலங்களில் வக்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைத்து அணைகளுக்கும் ஒரு ஆணையம் உள்ளது. இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் உள்ள அணைகளையும் இந்த ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல காவிரி நதியில் கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளன, அதேபோல தமிழ்நாட்டில் மேட்டூர் அணை உள்ளது.
கர்நாடகாவிலுள்ள அணைகள் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் கூட மேட்டூர் அணை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டாம். இந்த 5 அணைகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதற்காக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். உச்ச நீதிமன்றமும் தலையிட வேண்டும். இதுதான் காவிரி பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.