சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்: பொன்முடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களை திமுக நினைவுகூற தவறியதாக, தமிழகத்தின் சுதந்திர போராட்ட வரலாறு அனைத்தும் தெரிந்தவர்போல, ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருக்கிறார். அதற்கான பதிலை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்றே தெரிவித்துள்ளார்.

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேல் அக்கறை உள்ளவர் போல பேசுகிற தமிழக ஆளுநர், ஊடகங்கள் வழியாக நான் அளிக்கும் பேட்டியை நிச்சயமாக கேட்பார் என்று கருதுகிறேன். ஆளுநருக்கு உண்மையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிமன்ற பேரவைக்குழு இரண்டும் சேர்ந்து, ஆட்சிக்குழுவின் மூலமாக 18.8. 2023 அன்றும், ஆட்சிமன்ற பேரவைக்குழுவில் 20.9.2023 லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு ஒரு பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டது.

அது அந்த பல்கலைக்கழகத்தின் சட்ட விதியின்படி, ஆட்சிமன்ற பேரவைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். ஆனால், அதற்கு வேந்தரின் கையெழுத்தும் தேவை என சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரய்யா மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரர். கல்லூரி படிப்பையே இழந்து 9 ஆண்டுகள் சிறையில் வாடி இருக்கிறார். அதோடு இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து போராடியவர். அவருடைய வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டாவது ஆளுநர், இதில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.