ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபப் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். கடந்த 2018 ல் தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் உள்பட மூத்த தலைவர்கள் கட்சி மேலிட தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அசோக் கெலாட்டின் மகன் வைஷ்ணவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான வழக்கில் (பெமா)ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அதில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையை சேர்ந்த டிரைடன் ஹோட்டல்ஸ் அண்ட் ரெசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பணமோசடி செய்ததாக புகாரில் பெமா சட்டத்தின்படி ஜெய்ப்பூர், உதய்ப்பூர், மும்பை, டெல்லி உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் ரத்தன் காந்த் சர்மா அசோக் கெலாட்டின் மகன் வைஷ்ணவ் கெலாட்டுடன் தொடர்பு வைத்துள்ளார். கார் வாடகை தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் நெருங்கிய உறவு உள்ளது. அதோடு வைஷ்ணவ் கெலாட் மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து ஹோட்டல் பங்கு வாங்கியதாகவும், இதற்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த நிதியை டிரைடன் ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டதாகவுகள் புகார்கள் உள்ளன
இந்நிலையில் தான் அமலாக்கத்துறை வைஷ்ணவ் கெலாட்டுக்கு சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்துள்ளது. இதுதவிர ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுவா சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். இதுதவிர தவுசா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உள்பட வேறு சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தேர்தல் நெருங்கும் நிலையில் ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு தொடங்கி உள்ளது. மேலும் அசோக் கெலாட்டின் மகன் வைஷ்ணவ் கெலாட்டுக்கு பெமா வழக்கில் சம்மன் வழங்கி உள்ளனர்.
இதனை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர்.