சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய பாஜக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நவம்பர் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை அமலாக்கத்துறை குறிவைத்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் வெளியீடு தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோன்று மகன் வைபவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பாஜக ஜனநாயகத்தில் உள்ள கொள்கைகள் மூலம் மக்களை வெல்ல முற்பட வேண்டும், ஆனால் மக்களிடையே வன்முறையை தூண்டுகின்றது. மேலிடத்திலிருந்து அழுத்தம் இல்லாமல் அமலாக்கத்துறை, சிபிஐ வர முடியாது. நாடு முழுவதும் பயங்கரத்தைப் பரப்பியுள்ளனர். பாஜக தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளது என்றும், மாநில மக்களுக்கு உத்தரவாதங்களை அறிவித்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கை வந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு நிவாரணம் வழங்குவதை பாஜக விரும்பவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
மகன் வைபவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, “இந்த தந்திரங்களுக்கு” காங்கிரஸ் பயப்படப் போவதில்லை என்றார். நிலைமை கவலை அளிக்கிறது. மோடி அரசின் சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், பொதுமக்கள் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் கூறினார்.