முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
தேர்தல் நெருங்குவதால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக பாஜக அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி தரம்தாழ்ந்த விளையாட்டை ஆடி வருகிறது. ஒரேயொரு பாஜக நிர்வாகி வீட்டிலாவது இதுவரை அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எல்லோருக்குமான வளர்ச்சிக்கான அரசு என்று பாஜக அரசு கூறிக்கொள்கிறது. ஆனால் எல்லோரையும் வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அரசாகவே மோடி அரசு விளங்குகிறது.
குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகங்களில் திடீரென இந்தியா என்ற பெயரை மாற்றச்சொல்லி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது ஏன்? பிரதமர் மோடி முகமது பின் துக்ளக்கை போல ஆட்சி நடத்தி வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் மக்களை குழப்பி திண்டாட வைத்தவர் தற்போது இந்தியாவின் பெயரை மாற்றுவதாக குழப்புகிறார்.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை உருவாக்கியது ரவீந்திரநாத் தாகூர். ஆனால் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தைப் பெறும் பல்கலைக்கழகத்தில் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. சாந்திநிகேதனில் தாகூரின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனில் நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.