ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது என்று, கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், “என் மண், என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். “என் மண், என் தேசம்” இயக்கத்தின் மூலம் இந்தியாவில் உள்ள குக்கிராமங்களில் இருந்து அமிர்த கலசங்களில் மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு யாத்திரையாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. இந்தப் பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், இந்திய தபால் துறையினர், நேரு யுவகேந்திரா இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கலசங்களில் சேகரிக்கப்பட்ட மண்ணை நேற்று டெல்லி செல்லும் குழுவிடம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்படைத்தார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை தபால் அதிகாரி (அஞ்சல் மற்றும் வணிக வளர்ச்சி) பி.பி.ஸ்ரீதேவி, தலைமை தபால் அதிகாரி (சென்னை மண்டலம்) ஜி.நடராஜன், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் கே.கார்த்திகேயன், நேரு யுவகேந்திரா இயக்கத்தின் மாநில இயக்குனர் குணாமெத் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து மண்ணை சேகரித்து போர் நினைவு சின்னத்திற்கு கொண்டு செல்லும் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்க என்ன காரணம்?. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். பிறகு எதற்காக இந்த திட்டம்?.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கையைச் சேர்ந்த மருது சகோதரர்களின் நினைவு தினத்தை கடைபிடித்தோம். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள். தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், அவர்கள் செய்த தியாகத்தை நாம் மறந்துவிட்டோம். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை தாராளமாக எடுத்துக்கொண்டோம்.
1801-ம் ஆண்டு இந்த நிலத்தில்தான் சுதந்திர போராட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை சுதந்திரத்திற்காக இழந்துள்ளனர். சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானோரை நாம் மறந்துவிட்டோம். 1905-ம் ஆண்டு இந்து-பெங்கால், முஸ்லிம்-பெங்கால் என பிரித்தபோது அனைவரும் எதிர்த்தார்கள். “ஏன் அவ்வாறு பிரிக்கவேண்டும்?. நாம் அனைவரும் ஒரே நாட்டவர் தானே?” என்று குரல் கொடுத்தார்கள். அந்தக் குரல்தான் நம் நாட்டின் குரல். அப்படி ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது. இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிர்களை கொடுத்தோம்?. 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். இதுதான் நம் நாட்டின் ஒற்றுமை.
சட்டம் நமக்கான அடிப்படைக் கடமைகளை கொடுத்துள்ளது. அதில், நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களை கொண்டாடி போற்ற வேண்டும் எனக் கூறுகிறது. நாடு சுதந்திரம் பெற்றபோது, மகாத்மா காந்தி சோகமாக இருந்தார். “ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் இருந்து, பார்வைக்கு வெளியேறினாலும், பல வகையில் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்றனர்” என்று கூறினார். கண்ணுக்கு தெரியாத அந்தப் பிடியில் இருந்து நாம் விலகினால்தான், இந்தியா சுதந்திரமடைந்ததாக அர்த்தம்.
மத ரீதியாக, சாதி ரீதியாக இன்று நாம் சண்டை போட்டுக்கொள்கிறோம். இதுதான் நமது சுதந்திர இந்தியாவா?, தேசிய சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து காமராஜர் பள்ளி படிப்பை விட்டுவிட்டு போராடினார். இதேபோன்று தமிழகத்தில் இருந்து நிறைய பேர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். அதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
உத்திரமேரூர் சென்று பார்த்தபோது, அங்குள்ள கல்வெட்டுகளில் ‘ஜனநாயகம் என்பது என்ன?’ என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வழிமுறைகளை கூறியுள்ளார்கள். நாம் அனைவரும் அமிர்த கலச யாத்திரையை ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாட வேண்டும். தேசப்பற்று என்பது அனைவரின் உணர்விலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், “சுதந்திரப் போராட்ட ஹீரோக்களை நாம் போற்ற மறந்துவிட்டோம் என்கிறார் ஆளுநர். ஆமாம் ஆளுநர் அவர்களே, அதனால் தான் மோடி அரசு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் விடுதலை போராட்ட ஹீரோக்களுக்கு படம் வைக்காமல் புராண இதிகாச படங்களை மட்டுமே வைத்திருக்கிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் சாடியுள்ளார்.