காசா மீது இஸ்ரேல் 22வது நாளாக இன்றும் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் ஐநாவில் நிறைவேறியுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா ஆதரவளிக்காமல், வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 7ம் தேதி இந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை அந்நாடு ஏற்கவில்லை. எனவே 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக இதுவரை 2,913 குழந்தைகள் உட்பட 7,028 பேர் உயிரிழந்துள்ளனர். 18,484 பேர் படுகாயமடைந்துள்ளனர். மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது ஐநாவின் செயற்பாட்டாளர்கள் 35 பேரும், பத்திரிகையாளர்கள் 32 பேரும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியாகியுள்ளனர்.
போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா, சீனா, அரபு நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் மேற்கொண்ட முயற்சிகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று தொடங்கிய ஐநா பொதுக்குழு கூட்டத்தில் ஜோர்டன் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் மூன்றில் 2 பங்கு உறுப்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஐநா பொது சபையின் 10வது அவசரகால சிறப்பு அமர்வு நேற்று அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜோர்டன் சார்பில் வரை தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், “காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுப்பட வேண்டும். காசா மக்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், 195 நாடுகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தன. அதில் 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தன. அதேபோல இந்த தீர்மானமத்தில், ஹமாஸ் தாக்குதலை கண்டிக்க வேண்டும் என கனடா ஒரு திருத்தத்தை முன்மொழிந்தது. இந்த திருத்தமும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அது 3ல் 2 பங்கு வாக்குகளை பெற தவறியது. எனவே திருத்தம் தோல்வியடைந்தது. என்னதான் ஐநா பொதுக்குழுவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதில்லை. மாறாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் தீர்மானத்தையே மிக முக்கியமானதாக கருதுகின்றன. இருப்பினும் இந்த பொதுக்குழு வாக்கெடுப்பின் மூலமாக எந்தெந்த நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருக்கிறது என்பது தெரிந்துவிடும். இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. இந்தியாவக்கும் பாலஸ்தீனத்திற்குமான உறவு, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் மோசமடைந்திருப்பதாக விமர்சங்னங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஐநா சபையில் இந்தியாவின் நடவடிக்கை இதை மேலும் உறுதி செய்வதை போல இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1948ம் ஆண்டு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்நாட்டுக்கு எதிராக ஐநாவில் வாக்களித்த மிகச்சில நாடுகளில் ஒன்று இந்தியா. இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் நேருவை, பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கேட்டுக்கொண்டபோதும், நேரு அதை செய்ய மறுத்துவிட்டார். மட்டுமல்லாது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தபால் தலை கூட வெளியிடப்பட்டது. நேரு தொடங்கி, வாஜ்பாய், மன்மோகன்சிங் வரை இந்தியாவின் ஆதரவு எப்போதும் பாலஸ்தீனத்திற்குதான் இருந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இஸ்ரேல் போர் தொடங்கியபோது அந்நாட்டுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா, பாலஸ்தீனத்தோடு நிற்பதாக சில நாட்கள் கழித்து பிரதமர் கூறினார். அத்துடன் நின்றுவிடாமல் பாலஸ்தீனத்திற்கு தேவையான உதவி பொருட்களையும் அவர் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இப்படி இருக்கையில்தான் ஐநாவில் போர் நிறுத்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காமல் விலகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது:-
காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமும் அளிக்கிறது. நமது நாடு அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை இந்த கொள்கைகளுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த கொள்கைகள்தான் நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை இந்தியாவை வழிநடத்த தார்மீக தைரியத்தையும் இந்த கொள்கைகள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இப்படி இருக்கையில், மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவை இலட்சக்கணக்கான மக்களுக்குத் துண்டிக்கப்படுவதையும், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நிற்பது இந்த கொள்கைகளுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.