தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக ஆய்வுக் குழு சந்திப்பு!

தமிழகத்தில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக்குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.

பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ள அக்கட்சியின் விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் அமா் பிரசாத் ரெட்டி மேலும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது தொடர்பாக பாஜகவின் சதானந்த கவுடா தலைமையில் சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அமைத்து உத்தரவிட்டார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, மும்பையின் முன்னாள் காவல் ஆணையரும் எம்பியுமான சத்ய பால் சிங், ஆந்திரா மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, பாஜக எம்பி மோகன் ஆகிய 4 பேர் கொண்ட குழு சென்னை வந்தது. இந்த குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலையின் இல்லம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவியைக் கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 409-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காரணங்களின்றிக் கைது செய்யப்பட்டதை, களத்தில் தீர விசாரித்து, தக்க ஆதாரங்களுடன், தங்கள் மேலான கவனத்திற்கு, இக்குழு கொண்டு வருகிறது. மே 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநிலம் முழுவதும் பாஜககாரர்களுக்கு எதிரான கைதுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்திருக்கிறது. மாநில அரசு தங்கள் வசமுள்ள அதிகாரத்தை அத்துமீறி, சட்டத்திற்குப் புறம்பாக, தவறாகப் பயன்படுத்தி வருகிறது. ஆளும் திமுக அரசின் பழிவாங்கும் நோக்கத்துடன், பாஜகவினர் மீது அற்பமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. பாஜகவின் தொண்டர்களைக் கைது செய்தல், அதுவும் தீவிரவாதிகளைப் பிடிப்பதுபோல், நள்ளிரவில் கைது செய்தல், அவர்கள் மீது போடப்பட்ட அற்பமான குற்றச்சாட்டுகள் மற்றும் குண்டர் சட்டத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் ஆகியவை, எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், செயல்படும், மாநில அரசின் பழிவாங்கும் நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.

பாஜக பெண் தலைவர்கள் திமுகவினரால் அவதூறான வார்த்தைகளால் அவமானத்தைச் சந்தித்துள்ளனர். இது போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள் மீது முறையான புகார்கள் வந்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கைகளின் போது பாஜக பெண் தொண்டர்களை மோசமாக நடத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. சாதாரண சமூக ஊடக இடுகைகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவதும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதும், குடும்ப உறுப்பினர்களுக்குச் சரியான தகவலை வழங்காமல் சட்டவிரோதமாகக் கைது செய்வது என பாஜக தொண்டர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பாஜகவின் தொண்டர்கள், பாதிக்கப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களால் பணியிடங்களில் அச்சுறுத்தப்படுவது, அவர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்தாக உருவாகி வருகிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற செயல்கள் கேள்விப்படாதது. இவை தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பாசிசப் போக்கை நீக்கமற நிரூபிக்கிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் இல்லை. பட்டப்பகலில் நடக்கும் கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், திருட்டுகள், வழிப்பறிகள். மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரிப்பு, கனிமவளக் கொள்ளை. நாட்டு வெடி குண்டுகள், ரெளடிகள் மாஃபியா போன்றவை இதற்குச் சான்று. தமிழகத்தில் ஊழல்கள் மலிந்தும், குற்றங்கள் பெருகியும் இருக்கும் வேளையில், அதையெல்லாம் சரி செய்ய வேண்டிய மாநில அரசும், காவல்துறையும், அப்பாவி பாஜக-வினர் மீது பொய் வழக்குகளைச் சுமத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது வடிகட்டிய அரசியல் பழிவாங்கல் அன்றி வேறில்லை.

தமிழக பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்தும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த ஒரு அரசியல் சார்புடையவராக இருப்பினும், அவருக்கு நீதி பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதி. திமுகஉறுப்பினர்களுக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக பாஜக பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் கவனிக்கப்படாத பல நிகழ்வுகள் உள்ளன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, மாநிலத்தின் சட்ட மற்றும் சட்ட அமலாக்க அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் கடமை, நேர்மை மற்றும் நியாயம் பற்றிய சந்தேகங்களை எழுப்புகிறது. புகார்தாரரின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், அனைத்து புகார்களும் முழுமையாக முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமானது. அனைத்து அரசியல் கட்சிகளின் உரிமைகள் மற்றும் உறுப்பினர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், நமது மாநிலத்தின் சட்ட அமலாக்க அமைப்பு நியாயமான மற்றும் சமமான முறையில் இயங்குவதற்கும் உத்தரவாதம் அளிப்பதும் அவசியம். வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் இது இன்றியமையாது. தமிழ்நாட்டில், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில அரசிடம் இதனை வலியுறுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் தங்கள் பங்களிப்பு, அரசியல் மற்றும் சட்டத்துறைகளின் மீது தமிழக மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்குப் பெரிதும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.