சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் 5 மாதங்களாக சிறையில் இருக்கும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதலில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறை மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து உடல் நலனை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றமும் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு. ஆனால் உச்சநீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. பின்னர் நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை திங்கள்கிழமை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது இந்த வழக்கு வரும் நவம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.