“தேர்தல் வரும் போதெல்லாம் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கிறதா? அப்படியென்றால், போன வருஷம் கோயம்புத்தூரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடக்கவிருந்ததே.. அப்போது எந்த தேர்தல் வந்தது?” என்று பாஜக தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுகவினர் வைத்து வரும் விமர்சனங்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். மேலும், பயங்கரவாத செயல்களை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியதால், இப்போது பொதுமக்களுக்கு அது அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாம் இந்தியா முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் இந்த தாக்குதலில் தான் ஈடுபட்டதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் ஆளும் திமுக மீது பாஜகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆளுநர் மாளிகை மீதே குண்டு வீசக்கூடிய நிலையில் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என அவர்கள் விமர்சிக்கின்றனர். அதே சமயத்தில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் இதுபோன்ற வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெறுவது எப்படி என்றும், தேர்தலுக்கு முன்பு மக்களை திசைதிருப்பும் பாஜகவின் முயற்சி இது எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். இதனால் சட்டென ஆவேசமாகி வானதி சீனிவாசன் கூறியதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கை பற்றியோ, மாநிலத்தின் முன்னேற்றத்தை பற்றியோ கவலை இல்லை. அவரது கவனம், எண்ணம் எல்லாமே கவர்னர் மீதும், பாஜக மீதும் எப்படி குற்றம் சுமத்தலாம் என்பதை சுற்றியே இருக்கிறது.
போன வருஷம் கோயம்புத்தூர்ல காரில் சிலிண்டரை கொண்டு போய் ஒரு தற்கொலை தாக்குதலை நடத்த பாத்தாங்களே நியாபம் இருக்கா? அப்போ என்ன தேர்தலா வந்துச்சு? அது மட்டும் இல்ல.. தமிழகத்தில் எங்க கட்சியோட தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுலாம் என்ன தேர்தலுக்காக நடந்ததா? பயங்கரவாத செயல்களை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறுவதால், அது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.